மஹிந்த
ராஜபக்சவின் கருத்துக்கள் குறித்து பிபிசி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த
சம்பந்தன், இலங்கையில் போர்
முடிந்து நான்காண்டுகளாகியும், தமிழர்களின்
அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றார்.
மேலும், மனித உரிமைகள் குறித்த பிரச்சினையில் இன்னும்
ஒரு நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை என்றும் சம்பந்தன் குற்றஞ்சாட்டினார்.
இலங்கையின் வட
மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன, இதையும் சர்வதேச சமூகம் கணக்கிலெடுத்துக்
கொள்ளவில்லை என்று மஹிந்த கூறியதற்கு பதிலளித்த சம்பந்தன், அபிவிருத்தி என்பது ஒரு மாயை என்றார்.
வடக்கில்
மக்களுக்குத் தேவை சுய கௌரவத்துடன் கூடிய அரசியல் தீர்வும், அவர்களது இழப்புகளுக்கு நீதியும்தான். இதை
விடுத்து சாலைகளை அமைப்பது, மின்சாரக்
கம்பங்களை நடுவது போன்றவற்றால் மட்டும் மக்களை திருப்திப் படுத்த முடியாது என்றும்
அவர் கூறினார்.
வட மாகாணத்தில்
நடந்து முடிந்த தேர்தல்கள் கூட பெரும் சர்வதேச அழுத்தத்தின் பின்னணியில்தான்
நடந்து முடிந்தன என்று கூறிய சம்பந்தன், இந்தத் தேர்தலில் பல குறைகளை பட்டியலிடமுடியும் என்றும், ஆனாலும், குறைகளை மீறி, மக்கள் தங்களது கருத்தை தெளிவாக அரசுக்கு
உணர்த்தியிருக்கிறார்கள் என்றும் சம்பந்தன் கூறினார்.
இந்தத் தேர்தலை
ஒரு வாய்ப்பாக அரசு பயன்படுத்தி, உண்மையான
நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் சம்பந்தன் கோரினார்.
அரசு நியமித்த
நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தினாலே கூட, விமர்சனங்களிலிருந்து அரசு விடுபடலாம் என்று
கூறிய சம்பந்தன், ஆனால் இது
குறித்து அரசுக்கே ஒரு திடமான நிலைப்பாடு இல்லை, எனவே தான் இந்தப் பரிந்துரைகளைக் கூட
அமுல்படுத்த முடியவில்லை என்றும் கூறினார்.
No comments:
Post a Comment