சிங்களப் பேரினவாத
அரசும், சிங்கள
இராணுவமும், அதன்
புலனாய்வுத்துறையும், சிங்களத்தின்
அடிவருடிகளும், கொலை
அச்சுறுத்தல்களையும், அடாவடித்தனங்களையும்,
வன்முறை
வெறியாட்டங்களையும், தேர்தல்
முறைகேடுகளையும் புரிந்தபோதும், இப்பெரும்
சவால்களை முறியடித்துக்கொண்டு, தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு மிகப்பெரும் வெற்றியீட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
தமிழ் மக்களின்
தேசிய அபிலாசையைப் பாதுகாப்பதற்காக எத்தனை ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள், மாமனிதர்கள், எம்மினிய உறவுகள், இந்த மண்ணில் ஆகுதியாகியிருக்கின்றார்கள். இந்த
மண்ணின் மடியில் தாகம் தணியாமல் விடுதலைத் தவிப்புடன் கண்மலர்
மூடிக்கிடக்கின்றனர்.
அவர்களின் கனவு
மெய்ப்படவேண்டும் என்ற தவிப்புடன்தான் தமிழ் மக்கள், தமது வாக்குப் பலம் கொண்டு, உறுதியானதும் தெளிவானதுமான இந்தச் செய்தியை
இத்தத் தேர்தலின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
அழிவைப் புரிந்து,
ஆக்கிரமிப்பை
நிகழ்த்திக்கொண்டு, ஆசைவார்த்தை
பேசியபடி வந்த சிங்களப் பேரினவாதப் பெரும் பூதத்தை, வாக்குப்பலம் கொண்டு விரட்டியடித்திருக்கின்றனர்
எம் மக்கள்.
இந்தத் தேர்தல்,
உறங்கிக் கிடந்த
உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்திருக்கின்றது. தன்மானத்தை இழந்து, அற்பசொற்பங்களுக்காக இந்த இனம் சோரம் போகாது
என்ற தெளிவான செய்தியை வெளிப்படுத்த களம் அமைத்திருக்கின்றது.
முள்ளிவாய்க்காலில்,
சுற்றிவளைத்தெம்மை
துவம்சம் செய்தபோதும், நாம் மீண்டும்
எழுவோம் என்ற உறுதிப்பாட்டை, எம் இனத்தின்
மீளெழுச்சியை வெளிக்காட்ட இத்தேர்தல்க்களம் உதவியிருக்கின்றது.
“வீழ்வோம் என்று
நினைத்தாயா?” என்று, பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் முகத்தில்,
சவால் நிறைந்த ஆழமான
கேள்வியால் எம் மக்கள் அறைந்திருக்கின்றனர்.
தமிழ் தேசியக்
கூட்டமைப்பு, மிகப் பெரும்
பொறுப்பை தற்போது பொறுப்பேற்றிருக்கின்றது. மக்களின் முழுமையான ஆணையைப் பெற்றிருக்கின்றது.
மக்களின் அன்பையும், அசைக்கமுடியாத
நம்பிக்கையையும் பெற்றுள்ளது. அதற்கேற்ப அது தனது பயணத்தை தொடரவேண்டும் என்பது
தாயக மக்கள் உட்பட புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரினதும்
எதிர்பார்ப்பாகும்.
தமிழ் மக்களின்
விமோசனத்திற்கு, புலம்பெயர்ந்து
வாழும் மக்களும் அமைப்புக்களும், கைகோர்த்து ஒத்து
இயங்க தயாராகவே உள்ளன என்ற செய்தியை, இத்தேர்தல் வெற்றிக்காக புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் அக்கறையுடன்
செயற்பட்டார்கள் என்பது வெளிப்படுத்தி நிற்கின்றது.
பௌத்த சிங்களப்
பேரினவாத அரசுடன் கைகோர்த்து, தமிழ் மக்களின்
ஆயுதம் ஏந்திய விடுதலைப் போரை நசுக்கி அழித்த அனைத்துலக சமூகம், தமிழ் மக்களின் ஜனநாயக பூர்வமான நிலைப்பாட்டை
தற்போது தெட்டத் தெளிவாக அறிந்துள்ளது.
பயங்கரவாதம் என்ற
பெயரில், என் இனத்தின்
விடுதலைப் போரை அழிக்கத் துணைநின்ற, அனைத்துலக சமூகத்திற்கு தட்டிக்கழிக்க முடியாத பெரும் பொறுப்பு இருக்கின்றது.
இதுவிடயத்தில் அனைத்துலக சமூகத்திற்கும் பொறுப்புக்கூறும் கடப்பாடு இருக்கின்றது.
ஜனநாயக பூர்வமாக
தமிழ் மக்கள் வெளிப்படுத்திய தமது தேசிய அபிலாசையைப் புரிந்து கொண்டு, நீதியின் பேரில், தர்மத்தின்பேரில், அந்த இனத்திற்கு பக்கத்துணையாக செயற்படுவது
அனைத்துலக சமூகத்தின் கடமை. அதனை, எடுத்துரைப்பதும்,
இடித்துரைப்பதும்,
தாயக மக்கள்
பிரதிநிதிகளினதும், புலம்பெயர்
தமிழ்மக்களினதும் கட்டாயப் பணி.
மக்களின்
அபிலாசைகளைப் பிரதிபலித்து, மரண
அச்சறுத்தல்களுக்கு மத்தியில், அனைத்துச்
சவால்களுக்கும் முகம்கொடுத்தபடி, வேட்பாளர்களாகப்
போட்டியிட்ட எம் இனிய உறவுகளுக்கும், இத்தேர்தலின் கனதியை உணர்ந்து, தமிழர் தரப்பின்
வெற்றிக்குப் பாடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும், ஆர்வமுடன் வாக்களிப்பில் பங்குகொண்டு, இந்த வரலாற்றுப் பெருவெற்றிக்கு காரணமாயிருந்த
எம் அன்பிற்குரிய மக்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் தமிழர் நடுவம் சார்பில்
மனமகிழ்வோடும் மனநெகிழ்வோடும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அனைத்துக்
கைகளையும் இணைப்போம், எங்கள் அன்னை
மண்ணின் வாழ்வொன்று சமைப்போம்.
No comments:
Post a Comment