Wednesday, 25 September 2013

மகிந்த- பான் கீ மூன் சந்திப்பு: பயத்தில் நழுவிய சவேந்திர சில்வா!


நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதிவதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், ஐ.நா பொதுச்செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் இடையிலான நேற்றைய சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபைக்குள் வந்திருந்த அவர் ஜனாதிபதியும் செயலாளர் நாயகம் சந்திப்பதற்கு முன்பாக அங்கிருந்து நழுவிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
 
சவேந்திர சில்வா ஜனாதிபதி தலைமையிலான பிரதிநிதிகள் குழுவில் முக்கியமானவராக இருந்த போதிலும் ஜனாதிபதி மற்றும் மூன் இடையிலான சந்திப்புக்கு முன்னர் அங்கிருந்து உடனடியாக வெளியேறியதாகவும் சந்திப்பு இடம்பெற்ற அறையில் அவர் இருக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் அமைதிக்காக்கும் படையின் ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்த சில்வா அண்மையில் அதில் இருந்து நீக்கப்பட்டார்.

இலங்கையில் பிரதிவதிப்பிடப் பிரதிநிதியான சவேந்திர சில்வா, வன்னியில் விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சுமத்தப்படும் சர்ச்சைக்குரிய 58 வது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக பணியாற்றினார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கையில், சரணடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் பலரை 58 வது படைப்பிரிவினர் சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போர்க்குற்றம் தொடர்பில் சவேந்திர சில்வாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்காவில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா